இஸ்லாமாபாத்: சவுதி அரேபியாவின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் பாகிஸ்தான் வான் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் படைகளை அந்நாட்டுக்கு அனுப்பியுள்ளது.

மேற்கு ஆசிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்களை ஈரான் தாக்கி வருவதாகவும், சமீபத்தில் சவுதி அரேபியாவின் பெரிய எண்ணெய் கிணறு ஒன்றும் தாக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து, பாகிஸ்தான் தங்களிடம் உள்ள எல்.ஒய்.-80 மற்றும் எப்.எம்.-90 வான் பாதுகாப்பு அமைப்புகளை சவுதி அரேபியாவுக்கு வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இவை குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 15 முதல் 40 கி.மீ. வரையிலான தூரத்தில் இலக்குகளை தாக்கும் திறன் உள்ளதாகவும், ‘அன்சா’ எனப்படும் தோளில் சுமந்து ஏவப்படும் ஏவுகணை அமைப்பும் வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த தளவாடங்கள் ராவல்பிண்டியில் உள்ள நூர் கான் விமானப்படை தளத்திலிருந்து கராச்சி வழியாக சவுதி அரேபியாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல். ஈரானுடன் எல்லையை பகிரும் பாகிஸ்தானும் தாக்குதலுக்கு இலக்காகும் அபாயம் அதிகரிக்கலாம் எனவும் இந்த நகர்வு பார்க்கப்படுகிறது.