புதுடில்லியில், லோக்சபா உரிமைகள் குழுவின் தலைவராக முன்னாள் மத்திய சட்டத் துறை அமைச்சர் மற்றும் பா.ஜ. மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 9 முதல் ஏப்ரல் 2 வரை நடைபெற உள்ள நிலையில், சபாநாயகர் ஓம் பிர்லா இந்த குழுவை அமைத்துள்ளார். இந்த அமர்வில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
பிரதமர் நரேந்திர மோடியின் சமீபத்திய இஸ்ரேல் பயணம் மற்றும் எஸ்.ஐ.ஆர். (வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்) பணியின் போது மேற்குவங்கம், தமிழகம், கேரளா, புதுச்சேரி, அசாம் ஆகிய மாநிலங்களில் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் உள்ளிட்ட பல பிரச்னைகளை எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் எழுப்ப திட்டமிட்டுள்ளன.
2024ல் 18வது லோக்சபா அமைந்த பின், முதல் முறையாக உருவாக்கப்பட்டுள்ள 15 உறுப்பினர்கள் கொண்ட இந்த குழு, எம்.பி.க்களின் உரிமைகள் மீறல் அல்லது சபையின் மாண்புக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலான புகார்கள் எழும்போது அவற்றை விசாரித்து பரிந்துரைகள் வழங்கும் பணியை மேற்கொள்ளும்.
இந்த குழுவில் பா.ஜ. எம்.பி.க்கள் பிரிஜ்மோகன் அகர்வால், ராம்வீர் சிங் பிதுரி, சங்கீதா குமாரி சிங் தியோ, ஜெகதாம்பிகா பால், திரிவேந்திரா சிங் ராவத், ஜெகதீஷ் ஷெட்டார்; காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், தாரிக் அன்வர், மணிஷ் திவார்; தி.மு.க. எம்.பி. டி.ஆர். பாலு; திரிணமுல் காங்கிரஸ் கல்யாண் பானர்ஜி; சிவசேனா ஸ்ரீரங் அப்பா பர்னே; உத்தவ் பிரிவு சிவசேனா அர்விந்த் சாவந்த்; சமாஜ்வாதி தர்மேந்திரா யாதவ் ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, கூட்டத் தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டதால் உரிமைகள் குழு கூட்டத்தில் பங்கேற்க முடியாது என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.




