புதுடில்லி: ஈரான்-இஸ்ரேல் மோதல் சூழல் காரணமாக மேற்காசியாவில் விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.

பாதுகாப்பு காரணங்களால் அந்தப் பிராந்தியத்தின் சில சர்வதேச வான்வெளிப் பகுதிகள் மூடப்பட்டதால், விமான இயக்கங்கள் முடங்கியதாகவும், இதன் தாக்கத்தில் துபாய் விமான நிலையத்தில் சேவைகள் பாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் இந்திய பயணிகள் பலர் திரும்ப முடியாமல் சிக்கியுள்ளனர்.

இந்த நிலையில், இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் ஸ்பைஸ் ஜெட் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சிறப்பு மீட்பு விமானங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன. அதன் மூலம் துபாயிலிருந்து நேற்று காலை சில இந்திய பயணிகள் பாதுகாப்பாக தாயகம் திரும்பினர்.

மேலும், சவுதி அரேபியாவின் ஜெட்டாவிலிருந்து இண்டிகோ நிறுவனத்தின் 10 சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்படவுள்ளதாகவும், சூழ்நிலை மற்றும் பாதுகாப்பு நிலையைப் பொறுத்து அவை புறப்படும் நேரம் தீர்மானிக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. தடை செய்யப்பட்ட வான்வெளியைத் தவிர்த்து மாற்று வழித்தடங்களில் விமானங்களை இயக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, வான்வெளி கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப இந்தியா-மேற்காசியா இடையிலான வெளிநாட்டு விமான சேவைகள் குறைந்த அளவில் இயக்கப்படுகின்றன. மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு தலைமையில் நடந்த உயர் நிலை ஆலோசனைக் கூட்டத்தில், கட்டணத் திருப்பிச் செலுத்தல், நேர மாற்றம், பயணியர் உதவி ஆகியவற்றை வெளிப்படையாக வழங்க வேண்டும் என்றும், பாதுகாப்பில் எந்த சமரசமும் இருக்கக் கூடாது என்றும் விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.