புதுடில்லி: வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பாக தாயகம் அழைத்து வர மத்திய அரசும், இந்திய விமான நிறுவனங்களும் அவசர நடவடிக்கைகளை தொடங்கியுள்ளன. இந்த முயற்சிகள் அந்தந்த நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மற்றும் மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்துடன் இணைந்து ஒருங்கிணைக்கப்படுகின்றன.
இந்தியர்களுக்கு உதவுவதற்காக, வழக்கமான தூதரக சேவைகளை நிறுத்தி வைத்துள்ள சில இந்தியத் தூதரகங்கள் கட்டுப்பாட்டு அறைகளை திறந்து செயல்பட்டு வருகின்றன.
இண்டிகோ நிறுவனம், தேவையான அனுமதிகள் கிடைத்த பின்னரும் வான்வெளி நிலைமையைப் பொறுத்தும் படிப்படியாக சிறப்பு விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. பயணிகள் உறுதிப்படுத்தப்பட்ட தகவல் கிடைத்த பிறகே விமான நிலையத்திற்கு செல்ல வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது. ஏதேன்ஸ், மஸ்கட், ஜெட்டா, மதினா வழித்தடங்களில் சூழ்நிலைக்கு ஏற்ப சேவை தொடரும் என்றும், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து இயக்குவது அனுமதி கிடைத்த பின் முடிவு செய்யப்படும் என்றும் கூறியுள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனமும் புஜைராவிலிருந்து மும்பை மற்றும் டில்லிக்கு நாளை சிறப்பு விமானங்களை இயக்குவதாக அறிவித்துள்ளது. மேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து இந்தியர்களை அழைத்து வர இன்று 4 சிறப்பு விமானங்களை இயக்கியதாகவும், புஜைராவிலிருந்து டில்லி, மும்பை, கொச்சிக்கு கூடுதல் சிறப்பு விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் சூழ்நிலையை உன்னிப்பாக கவனித்து வருவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. வான்வெளி பயன்பாட்டில் கட்டுப்பாடுகள் இருப்பதால், நீண்ட தூர விமானங்கள் மாற்று வழித்தடங்களில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளன.




