தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலை முன்னிட்டு திமுகவுடன் கூட்டணி தொடர்பாக நிலவும் இழுபறிக்கிடையே, காங்கிரஸ் இன்று சென்னையில் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையை தொடங்குகிறது.
கடந்த சில வாரங்களாக தமிழக காங்கிரஸில் ஒரு தரப்பினர் தவெகவுடன் கூட்டணி வாய்ப்பை பேசத் தொடங்கினர். இதற்கிடையில், சுமார் இரண்டு மாதங்களுக்கு முன்பே தொகுதி பங்கீட்டுக்காக காங்கிரஸ் குழு அமைத்திருந்தாலும் திமுக தரப்பில் ஆரம்பத்தில் ஆர்வம் குறைவாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அதிகரித்து, மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட சிலர் திமுக கூட்டணியை வெளிப்படையாக விமர்சித்தனர்.
இந்த விவகாரம் கட்சி தலைமையிடம் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் திமுக கூட்டணிக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட நிர்வாகிகளை சமாதானப்படுத்தும் முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
தொகுதி பங்கீட்டில், ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை ஓரங்கட்டிய காங்கிரஸ் தலைமை 30 சட்டசபை தொகுதிகள் மற்றும் 2 ராஜ்யசபா இடங்கள் வேண்டும் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. ஆனால் 27 சட்டசபை தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா இடம் மட்டுமே தர முடியும் என ஸ்டாலின் உறுதியாக தெரிவித்ததால், பேச்சுவார்த்தை முடிவுக்கு வராமல் நீடிக்கிறது.
இந்நிலையில், கட்சி தலைமை எடுக்கும் முடிவை அனைவரும் ஏற்றுக்கொள்வோம் என மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். தனிநபர்களுக்கு கருத்து வேறுபாடு இருக்கலாம்; ஆனால் அனைவரையும் விட கட்சியே பெரியது என்றும், “ஒற்றுமையே நமது பலம்” என்றும் அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.




