பா.ஜ.க. தொழில்நுட்பப் பிரிவின் தேசியத் தலைவர் அமித் மாள்வியா மீது தமிழக போலீசார் பதிவு செய்த வழக்கை ரத்து செய்த மதுரை கிளை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

துணை முதல்வர் உதயநிதி “சனாதனத்தை ஒழிப்பது” குறித்து பேசியதையடுத்து, அதனைச் சார்ந்த சமூக வலைதள கருத்துப் பதிவை அமித் மாள்வியா வெளியிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் அணி அமைப்பாளர் தினகரன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மாள்வியா தாக்கல் செய்த மனுவை விசாரித்த மதுரை கிளை, அந்த வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. தீர்ப்பில், நீதிபதி ஸ்ரீமதி, “ஒழிப்பு” என்ற சொல் குறிப்பிட்ட மக்கள் குழு இருக்கக்கூடாது என்பதைக் குறிக்கிறது; மறைமுகமாக “இனப்படுகொலை” அல்லது “கலாச்சார படுகொலை” என்ற பொருளையும் தருகிறது என குறிப்பிட்டார். எனவே, துணை முதல்வரின் பேச்சை கேள்விக்குள்ளாக்கி செய்யப்பட்ட பதிவு வெறுப்புப் பேச்சாகாது; அது அந்த பேச்சுக்கான எதிர்வினை மட்டுமே என நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், காவல்துறை தாக்கல் செய்த பதில் மனுவில் அரசியல் சாயம் இருப்பதாகவும், அதிகாரிகள் அரசியல் சார்பற்றவர்களாக இருக்க வேண்டும்; எந்தக் கட்சிக்கும் ஆதரவாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது என்றும் உத்தரவில் கூறப்பட்டது.

இதனை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டில், உயர்நீதிமன்ற உத்தரவு சட்ட ரீதியாக ஏற்புடையதல்ல என்றும், “சனாதன ஒழிப்பு” என்பது சமூக நீதி மற்றும் சமத்துவத்தையே குறிக்கிறது என்றும் தமிழக அரசு வாதிட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.