வாஷிங்டன்: ஈரான் மீது தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து மத்திய கிழக்கில் இருந்து 9,000க்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் பாதுகாப்பாக அமெரிக்காவிற்கு திரும்பியுள்ளதாக அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார்.

தகவலின்படி, அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இஸ்ரேல் மீது நடத்தி வருவதால், இரு நாடுகளுக்கிடையே நேரடி போர் நிலை உருவாகியுள்ளது. மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களையும் ஈரான் குறிவைத்து தாக்கி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அபாயங்கள் அதிகரித்துள்ள நிலையில், பல மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்கர்கள் உடனடியாக அந்நாடுகளை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரிக்கை அறிவுறுத்தல்கள் வெளியிட்டுள்ளது.

இந்த சூழலில், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க குடிமக்கள் வீடு திரும்ப விரும்பினால் வெளியுறவுத்துறை இணையதளத்தில் பதிவு செய்யுமாறு டிரம்ப் கேட்டுக் கொண்டார். அவர்கள் இருக்கும் இடத்தை கண்டறிந்து பயண ஏற்பாடுகளை செய்யப்படும் என்றும், இலவசமாக விமானங்களை வாடகைக்கு எடுத்து இயக்குவதுடன் வணிக விமான விருப்பங்களையும் முன்பதிவு செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், 24 மணி நேரமும் +1-202-501-4444 என்ற எண்ணில் வெளியுறவுத்துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம் என்றார்.