துபாய்: ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் ஈரான் மேற்கொண்ட தாக்குதல்களை தாம் முறியடித்ததாக ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ) தெரிவித்துள்ளது. இதுவரை 1,000-க்கும் மேற்பட்ட தாக்குதல் முயற்சிகள் நடந்துள்ளதாகவும் கூறியுள்ளது.
அணுஆயுத ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்கா ஈரான் மீது தாக்குதல் நடத்தியதாகவும், அதன் பின்னர் வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து ஈரான் தாக்குதலைத் தொடர்ந்ததாகவும் யுஏஇ தரப்பு குறிப்பிட்டுள்ளது. யுஏஇ, கத்தார், குவைத் உள்ளிட்ட நாடுகளில் உள்ள தளங்கள் குறிவைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
யுஏஇ பாதுகாப்பு அமைச்சகத்தின் தகவலின்படி, ஈரான் 194 ஏவுகணைகளை ஏவியது. இதில் 180 ஏவுகணைகள் இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டதாகவும், 13 ஏவுகணைகள் கடலில் விழுந்ததாகவும், ஒரு ஏவுகணை பிராந்தியத்தில் சேதத்தை ஏற்படுத்தியதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் 812 டிரோன்கள் ஏவப்பட்டதில் 755 டிரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டதாகவும், 57 டிரோன்கள் சேதத்தை ஏற்படுத்தியதாகவும் யுஏஇ தெரிவித்தது.
ஈரான் மீது தாக்குதல் நடத்த தமது நிலப்பரப்பையோ வான்வெளியையோ பயன்படுத்த எந்த அனுமதியும் வழங்கவில்லை என யுஏஇ விளக்கம் அளித்துள்ளது. பிராந்திய பாதுகாப்புக்காக தற்காப்பு நடவடிக்கைகள் தொடரும் என்றும் தெரிவித்துள்ளது. இதனிடையே, ஈரான் தாக்குதல் தொடர்வதால் ‘சர்வதேச கிராமம்’ இன்றும் மூடப்படும் என அரசு அறிவித்தது; பாதுகாப்பு நிலைகள் மற்றும் உள்கட்டமைப்புகளின் புகைப்படங்களை பகிர வேண்டாம் என துபாய் போலீசார் பொதுமக்களை வலியுறுத்தினர்.




