ஈக்வடாரில் பயங்கரவாத அமைப்புகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குழுக்களை குறிவைத்து அமெரிக்கா ராணுவ நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிபர் டிரம்பின் உத்தரவின் பேரில், ஈக்வடார் படைகளுடன் இணைந்து இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதற்கு முன் ஈரானில் அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் உச்ச தலைவர் ஆயத்துல்லா கமேனி கொல்லப்பட்டதாகவும், அதன் பின்னணியில் தற்போது கவனம் ஈக்வடாரில் செயல்படும் குழுக்கள்மீது திரும்பியுள்ளதாகவும் அந்த செய்தி குறிப்பிடுகிறது.

டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்தில் எல்லை தாண்டி வரும் போதைப்பொருட்களுக்கு எதிராக கடுமையான நிலைப்பாடு எடுத்துள்ள நிலையில், அதின் ஒரு பகுதியாகவே இந்த ராணுவ நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக வட்டாரங்கள் கூறுகின்றன.

அமெரிக்க ராணுவம் வெளியிட்ட அறிக்கையில், ஈக்வடாரில் சட்டவிரோத செயல்பாடுகளுக்கு எதிராக ஈக்வடார் மற்றும் அமெரிக்க படைகள் இணைந்து நடவடிக்கைகளை தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது. மக்கள் மீது பயங்கரவாதம், வன்முறை மற்றும் ஊழலைத் திணிக்கும் பயங்கரவாதிகளை எதிர்கொள்ள இரு நாடுகளும் ஒன்றாக செயல்படுகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த நடவடிக்கைக்கு ஆதரவு தெரிவித்த ஈக்வடார் மக்களின் தைரியத்தையும் உறுதியையும் பாராட்டுவதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.