நான்காம் நிலை பணியாளர்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, சென்னை எழிலகம் வளாகத்தில் கிராம உதவியாளர்கள் நேற்று 27வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு கிராம உதவியாளர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில், பிப். 5 முதல் மாநிலம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் பிப். 11 முதல் தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மாநில பொதுச்செயலர் முருகன் கூறுகையில், வருவாய் துறை உயர் அதிகாரிகளை சந்தித்து பேசியபோது, சம்பந்தப்பட்ட கோப்புகள் அனைத்தும் நிதித்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், இதுவரை அங்கிருந்து பதில் வரவில்லை என்றும் தெரிவித்ததாக கூறினார். 27 நாட்களாக போராடியும் நிதித்துறையிலிருந்து பதில் இல்லாதது வேதனை அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், ‘பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும்’ உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் வருவாய் துறை அலுவலர்கள் நேற்று எட்டாம் நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகம் முழுவதும் கலெக்டர் அலுவலகங்களில் பணியை புறக்கணித்து நடந்த போராட்டங்களால் அன்றாட அலுவல் பணிகள் பாதிக்கப்பட்டன.

மேலும், தமிழக மின் வாரிய பணியாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் ஊதிய உயர்வை தொடர்ந்து வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதையடுத்து 20 சங்க நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு மின் வாரியம் அழைத்த நிலையில், நேற்று மாலை வரை 10க்கும் மேற்பட்ட சங்கங்களுடன் பேச்சு நடந்ததாக தெரிவிக்கப்பட்டது; அதிகாரிகளை ஊதிய உயர்வில் சேர்க்காவிட்டால் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என சங்கங்கள் எச்சரித்தன.