கோல்கட்டா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடந்த டி20 உலககோப்பை முதல் அரையிறுதி போட்டியில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்ரிக்காவுக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. கேப்டன் ஐடன் மார்க்ரம் (18), குயின்டர் டி காக் (10), ரியான் ரிக்கல்டன் (0), டேவிட் மில்லர் (6) ஆகியோர் குறைந்த ரன்னில் வெளியேறினர். பிரேவிஸ் (34), ஸ்டப்ஸ் (29) ஓரளவு நிலைநிறுத்த, மார்கோ ஜான்சன் 55 ரன்னுடன் அவுட் ஆகாமல் இருந்தார். இதனால் தென் ஆப்ரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்தது.
நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி, மைக்கேல் மெக்கோன்ஹில், ரச்சின் ரவீந்திரா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
170 ரன் இலக்கை துரத்திய நியூசிலாந்து, தொடக்க வீரர்கள் டிம் செய்பெர்ட் மற்றும் பின் ஆலன் மூலம் அதிரடி தொடக்கம் பெற்றது. பின் ஆலன் 33 பந்துகளில் சதம் அடித்து கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்தார்; செய்பெர்ட் 58 ரன் எடுத்தார். ரச்சின் ரவீந்திரா 13 ரன் சேர்த்தார். நியூசிலாந்து 12.5 ஓவரில் 1 விக்கெட் இழப்புக்கு 173 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
மார்ச் 5 அன்று நடைபெறும் இரண்டாவது அரையிறுதியில் இந்தியா–இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. அதில் வெற்றி பெறும் அணி, மார்ச் 8 அன்று ஆமதாபாதில் நடைபெறும் பைனலில் நியூசிலாந்தை எதிர்கொள்ளும்.




