ஐரோப்பிய நாடான பின்லாந்தின் அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப், நான்கு நாள் அரசுமுறை பயணமாக புதுடில்லி வந்தடைந்தார். வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதே இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கமாக கூறப்படுகிறது.
டில்லி விமான நிலையத்தில் அவருக்கு வெளியுறவுத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் வரவேற்பளித்தார். இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருதரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தச் சந்திப்புகளின் ஒரு பகுதியாக, இன்று பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இன்று மாலை டில்லியில் தொடங்கும் ரைசினா சர்வதேச மாநாட்டில் தலைமை விருந்தினராக அவர் பங்கேற்கிறார்.
அதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் துணை ஜனாதிபதி சி.பி. ராதா கிருஷ்ணன் ஆகியோரையும் ஸ்டப் சந்திக்க உள்ளார். நாளை மும்பை சென்று முன்னணி தொழிலதிபர்களை சந்திக்கும் அவர், சனிக்கிழமை இந்தியப் பயணத்தை முடித்து பின்லாந்து திரும்புகிறார்.
இந்தியா புறப்படும் முன் சமூக வலைதளத்தில் பதிவிட்ட ஸ்டப், இந்தியா–பின்லாந்து உறவுகள் மேலும் வலுப்படும் என்றும், குறிப்பாக வர்த்தகத்தில் முழு ஒத்துழைப்பு ஏற்படும் என்றும் தெரிவித்திருந்தார். அவரது வருகையால் இருநாட்டு உறவுகள் புதிய உச்சத்தை எட்டும் என பிரதமர் மோடியும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.




