திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூண் அருகே வழிபாடு நடத்த அனுமதிப்பது தொடர்பாக, தமிழக அரசு தனது நிலைப்பாட்டை தெரிவிக்க அவகாசம் வழங்கி மதுரை உயர் நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது. தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான முன் உத்தரவை நிறைவேற்றவில்லை எனக் கூறி தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு மனு விசாரணையில் இந்த உத்தரவு பிறந்தது.

முன்னதாக, நீதிமன்றம் நியமிக்கும் 5 பேர் கொண்ட குழுவை மலை உச்சிக்கு சென்று சுமார் 15 நிமிடம் ‘அடையாள வழிபாடு’ செய்ய அனுமதிக்கலாம் என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பரிந்துரைத்திருந்தார். இது கட்டாய வழிகாட்டல் அல்ல; பரிந்துரை மட்டுமே எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இதற்கு அரசு தரப்பு பின்னர் கருத்து தெரிவிப்பதாக தெரிவித்தது.

விசாரணையில் மதுரை மாநகர காவல் துறை உயர் அதிகாரிகள், கோயில் காவல் ஆய்வாளர், கோயில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் மற்றும் செயல் அலுவலர் உள்ளிட்டோர் ஆஜரானனர். அரசு, கோயில் நிர்வாகம், காவல் ஆணையர் மற்றும் மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்களும் வாதிட்டனர்.

அரசு தரப்பில், வழிபாட்டுக்கு அனுமதி வழங்குவது குறித்து கோயில் ஸ்தானிகர் மட்டுமின்றி அறநிலையத் துறையிடமும் ஒப்புதல் பெற வேண்டியிருப்பதாகவும், ஆகம விதிகள் பின்பற்றுவது தொடர்பாக முடிவு எடுக்க வேண்டியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. தேவையான சட்டரீதியான ஒப்புதல்களை பெற அறங்காவலர் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாக கூறி, முடிவெடுக்க 2 வாரங்கள் அவகாசம் கோரப்பட்டது.

இதற்கு நீதிபதி, நீதிமன்றம் பரிந்துரைத்த ஏற்பாட்டிலிருந்தும் பின்வாங்குவது எப்படி என கேள்வி எழுப்பியதுடன், இந்த விவகாரத்தில் அரசியல் கலக்கக் கூடாது எனவும் வலியுறுத்தினார். நீதிமன்றம் நியமிக்கும் குழுவை தீபத்தூண் அருகே வழிபட அனுமதிப்பது குறித்த அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க அவகாசம் வழங்கப்பட்டது.