புதுடில்லி: ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடியதன் எதிரொலியாக, வளைகுடா கடல் பகுதியில் கடல்வழிப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய மாலுமிகள் பலர் கடலில் சிக்கி தவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதல் தீவிரமடைந்துள்ள சூழலில், பிராந்திய போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் சுமார் 20 சதவீதம் நடைபெறும் ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால், முக்கிய எண்ணெய் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது.
தடை மீறி ஜலசந்தி வழியாக வரும் கப்பல்களுக்கு தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் வெளிப்படையாக எச்சரித்துள்ளது. இதற்கு பதிலாக, அந்த வழியாக செல்லும் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்குவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்தப் பதற்றம் காரணமாக, ஹார்முஸ் வழியை தவிர்த்து வளைகுடா கடல் பகுதியில் பல கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதில் மத்திய அரசுக்குச் சொந்தமான ‘ஷிப்பிங் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா’ நிறுவனத்தின் 7 கப்பல்கள் உட்பட, இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட 36 கப்பல்கள் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது; அவற்றில் 1,074 இந்திய பணியாளர்கள் உள்ளனர்.
மேலும், வளைகுடா பிராந்தியத்தில் இயங்கும் பிற கப்பல்களிலும் சேர்த்து 23,000 இந்திய மாலுமிகள் பாதிக்கப்படக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்திய கப்பல்களின் நிலவரத்தை மத்திய அரசு ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒருமுறை கண்காணித்து வருவதாகவும், ஜலசந்தி மூடப்பட்டிருந்தாலும் மிகவும் ஆபத்தான செங்கடல் வழியை எந்த இந்திய கப்பலும் பயன்படுத்தவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.




