இலங்கையின் காலி துறைமுகம் அருகே இந்தியப் பெருங்கடலில் ஈரானின் ‘டீனா’ போர்க்கப்பல் மூழ்கிய சம்பவத்திற்கு அமெரிக்காவை குற்றம்சாட்டி ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது “கொடூரச் செயல்” எனவும் ஈரான் தெரிவித்தது.

செய்தி விவரப்படி, இந்தியாவின் அழைப்பின் பேரில் பிப். 18 முதல் 25 வரை வங்கக் கடலில் நடைபெற்ற பயிற்சியில் ‘டீனா’ பங்கேற்றது. பயிற்சி முடிந்த பின்னர் கப்பல் தாயகம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் காலி அருகே கடலில் சென்றுகொண்டிருந்த கப்பல்மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் டர்பிடோ தாக்குதல் நடத்தியதாகவும், இதனால் கப்பல் மூழ்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 87 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அரக்சி வெளியிட்ட அறிக்கையில், ஈரான் கடற்கரையிலிருந்து சுமார் 2,000 மைல்கள் தொலைவில் இந்த தாக்குதல் நடந்ததாக கூறினார். இந்தியாவுக்கு விருந்தினராக சென்றுவிட்டு திரும்பிய கப்பல் மீது எந்த முன்னறிவிப்பும் இன்றி தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம்சாட்டிய அவர், இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா “நிச்சயம் வருத்தப்பட வேண்டியிருக்கும்” என எச்சரித்தார்.