ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டுப்படைகள் நடத்தும் தாக்குதல் 6வது நாளாக தொடரும் நிலையில், அதற்கு பதிலடியாக ஈரான் பல இடங்களில் தாக்குதல் நடத்தியதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

அஜர்பைஜான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ஈரான் பகுதியிலிருந்து அதிகாலை டிரோன்கள் அஜர்பைஜானின் நக்சிவன் பகுதியை நோக்கி ஏவப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதில் ஒன்று விமான நிலையப் பகுதியில் விழுந்து சேதம் ஏற்படுத்தியதாகவும், மற்றொன்று ஷகராபாத் கிராமத்தில் பள்ளி கட்டடம் அருகே விழுந்ததில் பொதுமக்கள் இருவர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த தாக்குதலை சர்வதேச விதிமுறைகளை மீறும் செயல் என்றும், பதற்றத்தை அதிகரிக்கும் என்றும் அஜர்பைஜான் கண்டனம் தெரிவித்தது. ஈரான் விளக்கம் அளித்து முறையான விசாரணை நடத்தி, இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறியது. பதிலடி கொடுக்க அஜர்பைஜானுக்கு உரிமை உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து ஈரான் தூதரை வரவழைத்து கண்டனம் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கத்தாரில், தோஹாவில் உள்ள அமெரிக்க தூதரகம் நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகள் வான் பாதுகாப்பு அமைப்பால் இடைமறித்து அழிக்கப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். இதேவேளை, ஈரான் அனுப்பிய பாலிஸ்டிக் ஏவுகணைகளைத் தாங்கள் தாக்கி அழித்ததாக இஸ்ரேல் கூறியது; தங்கள் நாட்டை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணையையும் வான் பாதுகாப்பு அமைப்பு முறியடித்ததாக துருக்கி தெரிவித்தது.

இதற்கிடையில், அபுதாபி விமான நிலையத்தில் குறிப்பிட்ட விமான சேவைகள் மீண்டும் தொடங்கியுள்ளதாக ஏடி மீடியா அலுவலகம் தெரிவித்துள்ளது.