புதுடில்லி: உலகளாவிய எந்த பிரச்னைக்கும் போர் தீர்வாகாது; மோதல்களை ராணுவ நடவடிக்கைகளால் அல்ல, பேச்சுவார்த்தை வழியாகவே தீர்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் நான்கு நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில், டில்லியில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து இரு நாடுகளுக்கிடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக தெரிவிக்கப்பட்டது.

பின்னர் இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்த போது, ஈரான் தொடர்பான பதற்றம், இஸ்ரேல்-அமெரிக்கா சூழல் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் உள்ளிட்ட பின்னணியில் உலக அமைதிக்கான இந்தியாவின் நிலைப்பாட்டை மோடி விளக்கினார்.

ஈரான் மோதல் நிறுத்தப்பட வேண்டும் என்றும், ராணுவ நடவடிக்கைக்கு பதிலாக பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும் பயங்கரவாதத்தை முழுமையாக வேரறுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

உக்ரைனாக இருந்தாலும் மேற்கு ஆசியாவாக இருந்தாலும் மோதல்கள் விரைவில் முடிவுக்கு வரவும் அமைதி நிலைநாட்டவும் மேற்கொள்ளப்படும் முயற்சிகளை இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும் என்றும், உலகளாவிய நிறுவனங்களில் சீர்திருத்தங்கள் அவசியம்; அவை விரைவில் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் மோடி தெரிவித்தார்.