டெஹ்ரான்: போரில் கொல்லப்பட்ட ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மகன் மொஜ்தபா ஹொசைனி கமேனி (56) நாட்டின் புதிய உச்ச தலைவராக பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேற்காசிய நாடான ஈரானில் உச்ச அதிகாரம் கொண்டவரும் மூத்த ஷியா மதகுருவுமான அயதுல்லா அலி கமேனி, கடந்த 28-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. டெஹ்ரானில் உள்ள அவரது இல்லம் முற்றிலும் அழிக்கப்பட்டதாகவும், தாக்குதலில் குடும்பத்தினர், ஆலோசகர்கள் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் உள்ளிட்டோரும் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இடைக்கால உச்ச தலைவராக அயதுல்லா அலிரெசா அராபி நியமிக்கப்பட்டார். கமேனிக்கு அடுத்ததாக யார் பதவியேற்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், 88 உறுப்பினர்கள் கொண்ட ‘அசெம்பிளி ஆப் எக்ஸ்பெர்ட்ஸ்’ அவசர கூட்டத்தை கூட்டியது.

வழக்கமாக கோம் நகரில் உள்ள செயலகத்தில் நடைபெறும் இந்த கூட்டம், சமீபத்திய தாக்குதல்களில் அந்த கட்டிடம் தரைமட்டமானதால் பாதுகாப்பான மாற்று இடத்தில் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த கூட்டத்தில் மொஜ்தபா கமேனி புதிய உச்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மொஜ்தபா ஷியா மதகுருவாக இருந்தாலும், எந்த அதிகாரப்பூர்வ அரசு பதவியும் வகிக்கவில்லை. ஆனால் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை மற்றும் உளவுத்துறை அமைப்புகளுடன் நீண்டகால தொடர்புகள் உள்ளதால் அவர் சக்திவாய்ந்த நபராக கருதப்படுகிறார். தந்தையிடமிருந்து மகனுக்கு நேரடியாக பதவி சென்றதாக கூறப்படும் இந்த முடிவு பல கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், புரட்சிகர காவல்படையின் கடுமையான அழுத்தத்தின் கீழ் இது எடுக்கப்பட்டதாக இஸ்ரேலிய மற்றும் ஈரான் எதிர்க்கட்சி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.