முன்னாள் பிரதமர் கே.பி. சர்மா ஒலி தலைமையிலான அரசு கவிழ்ந்ததைத் தொடர்ந்து, நேபாளத்தில் இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் இளம் தலைமுறையினர் நடத்திய போராட்டங்களுக்குப் பிறகு சர்மா ஒலி பதவி விலகினார். அதன் பின்னர், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சுசீலா கார்க்கி தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது.

கடும் அரசியல் குழப்பம் நீடிக்கும் சூழலில், இன்று நடைபெறும் தேர்தலில் 1.89 கோடி வாக்காளர்கள் 275 உறுப்பினர்கள் கொண்ட பிரதிநிதிகள் சபைக்கான உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க உள்ளனர்.

மன்னராட்சியை ஆதரிக்கும் ராஷ்ட்ரிய சுதந்திர கட்சி, காத்மாண்டு முன்னாள் மேயர் பாலென் (35) என்பவரை பிரதமர் வேட்பாளராக அறிவித்துள்ளது. ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட்–லெனினிஸ்ட் கட்சியில் மீண்டும் சர்மா ஒலியே பிரதமர் வேட்பாளராக நிற்கிறார்.

இந்தத் தேர்தலில் மாற்றம் வேண்டும் எனக் கூறும் தரப்பினர் இளம் தலைவர்கள் முன்னே வர வேண்டும் என வலியுறுத்துகின்றனர். அதே நேரத்தில், 2008ல் ஒழிக்கப்பட்ட மன்னராட்சி மீண்டும் வர வேண்டும் எனக் கோரும் ஒரு தரப்பும் உள்ளது.