புதுடில்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணையில் கைப்பற்றப்பட்ட கோப்ரோ கேமரா, சம்பவத்திற்கு முன்பே சீனாவில் செயல்பாட்டில் இருந்தது என தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) கண்டறிந்துள்ளது.

விசாரணை அதிகாரிகள் கூறுவதன்படி, அந்த கேமரா 2024 ஜனவரி 30 அன்று சீனாவின் டாங்குவான் பகுதியில் முதன்முறையாக இயக்கப்பட்டுள்ளது. பஹல்காமில் தாக்குதல் நடத்துவதற்கு சுமார் ஒரு மாதத்திற்கு முன் இது பயன்படுத்தப்பட்டதால், தாக்குதலுக்கு முன் உளவு பார்க்கும் நோக்கில் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலா பயணிகள் மீது, லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பாக குறிப்பிடப்படும் ‘தி ரெசிஸ்டன்ஸ் பிரன்ட்’ தொடர்புடைய பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக ஹிந்துக்களை குறிவைத்து நடந்ததாக கூறப்படும் இந்த தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.

இந்த கேமரா மூலம் தாக்குதலுக்கான திட்டமிடல் மற்றும் செயல்படுத்தல் தொடர்பான முக்கிய தடயங்களை உறுதிப்படுத்த முடியும் என என்.ஐ.ஏ. நம்புகிறது. கேமராவை யார் வாங்கினார், முன்பு யார் பயன்படுத்தினார், அது எவ்வாறு பாகிஸ்தான் சார்ந்த பயங்கரவாதிகள் வசம் சென்றது போன்ற விவரங்களை அறிய சீனாவின் உதவியை கோரி கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த தகவல்களை ஜம்முவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திலும் என்.ஐ.ஏ. சமர்ப்பித்துள்ளது. இந்தியா-சீனா இடையே பரஸ்பர சட்ட உதவி உடன்பாடு இல்லாவிட்டாலும், நாடு கடந்த ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பான தகவல்களை ஐ.நா. மாநாட்டு விதிகளின் கீழ் பரிமாறிக் கொள்ள முடியும் என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.