பாட்னா: பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் (75) அம்மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வாகும் வகையில் போட்டியிடலாம் என்ற தகவல் வெளியாகி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.பி. ஆகும் பின்னர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

பீஹாரில் தற்போது ஐக்கிய ஜனதா தளம்–பா.ஜ. கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாநிலத்தில் காலியாகும் ஐந்து ராஜ்யசபா இடங்களில், 243 உறுப்பினர்கள் கொண்ட சட்டசபையில் ஆளும் கூட்டணிக்கு 202 எம்.எல்.ஏ.க்கள் இருப்பதால், நான்கு இடங்கள் கூட்டணிக்கே கிடைக்கும் என கணிக்கப்படுகிறது. இதனால் காங்கிரஸ்–ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணிக்கு வாய்ப்பு குறைவாக இருக்கும் என தகவல்.

இந்த பின்னணியில், பாட்னாவில் ஐ.ஜ.த. தேசிய செயல் தலைவர் சஞ்சய் ஜா, மத்திய அமைச்சர் லாலன் சிங், மாநில அமைச்சர் விஜய் சவுத்ரி உள்ளிட்டோருடன் நிதிஷ் குமார் நீண்ட ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இன்று வேட்புமனு தாக்கல் கடைசி நாள் என்பதால், அவரது வேட்புமனு குறித்து எந்த நேரத்திலும் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், நிதிஷ் குமார் தனது 50 வயது மகன் நிஷாந்தை தீவிர அரசியலுக்குள் கொண்டு வந்து துணை முதல்வராக முன்னிறுத்த திட்டமிடுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. வேட்புமனு தாக்கல் முடிவடையும் நிலையில், நிதிஷ் ராஜ்யசபாவுக்கு செல்வாரா அல்லது முதல்வராக தொடர்வாரா என்ற கேள்விக்கு இன்று மாலைக்குள் விடை கிடைக்கும் என கூறப்படுகிறது.

இதற்கிடையில், நிதிஷ் ராஜினாமா செய்தால் முதல்வர் பதவி பா.ஜ.வுக்கு செல்லக்கூடும் என்றும், தற்போதைய துணை முதல்வர்களான சாம்ராட் சவுத்ரி அல்லது விஜய் குமார் சின்ஹா ஆகியோரில் ஒருவர் முதல்வராகலாம் என்றும் பேசப்படுகிறது. இதை விமர்சித்த ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர்கள், நிதிஷ் குமார் பா.ஜ.வின் கட்டுப்பாட்டில் செயல்படுவதாகவும், தேவையான வெற்றிகளை பெற்ற பின் அவரை ஓரங்கட்டும் முயற்சி நடக்கலாம் என்றும் குற்றஞ்சாட்டினர்.