பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் பாட்னாவில் நடைபெறும் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவதற்காக புதன்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார். பாஜ தேசியத் தலைவர் நிதின் நபினும் வேட்புமனு தாக்கல் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக பீஹார் மக்கள் தொடர்ந்து வழங்கிய ஆதரவால் மாநிலம் வளர்ச்சி அடைந்துள்ளதாக நிதிஷ் குமார் குறிப்பிட்டார். வரும் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்டு எம்.பி. ஆக தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், பீஹாரில் அமையவிருக்கும் புதிய அரசுக்கு முழு ஆதரவும் ஒத்துழைப்பும் வழங்குவதாக கூறினார். பாட்னாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
பீஹாரில் 10 முறை முதல்வராக பதவியேற்றுள்ள நிதிஷ் குமார், தேசிய அரசியலில் கவனம் செலுத்த இருப்பதாக செய்தியில் கூறப்பட்டுள்ளது. அவர் ஏற்கனவே பீஹார் சட்டசபை, சட்ட மேல்சபை மற்றும் லோக்சபா உறுப்பினராக இருந்துள்ளார்; ராஜ்யசபாவுக்கும் தேர்வானால் நான்கு சபைகளிலும் உறுப்பினராக இருந்த தலைவர்களில் ஒருவராக அவர் திகழ்வார்.
இதற்கிடையில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்து ராஜ்யசபா எம்.பி. ஆக தேர்வாகும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பீஹாரில் அவரது வீட்டுமுன் மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவியதாக தெரிவிக்கப்பட்டது.




