வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான மோதல் ஐந்தாவது நாளை கடந்துள்ள நிலையில், போர் மேலும் நீடித்தால் அமெரிக்காவின் முக்கிய ஏவுகணை கையிருப்பில் அழுத்தம் உருவாகலாம் என பென்டகன் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
அணுசக்தி தொடர்பான பேச்சுவார்த்தைகளில் ஈரான் ஒத்துழைக்கவில்லை எனக் கூறி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதலைத் தொடங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி மற்றும் முக்கிய படை பிரிவு தளபதிகள் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கு பதிலடியாக, ஈரான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் பஹ்ரைன், சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை தாக்கி வருகிறது. போர் 4 முதல் 5 வாரங்கள் நீடிக்கும் என அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியிருந்தாலும், கையிருப்பு குறைவு அதற்கு முன்பே தோன்றக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிகாரிகள் கூறுவதன்படி, போர் மேலும் 10 நாட்கள் நீடித்தால், எதிரி ஏவுகணைகளை இடைமறிக்கும் தடுப்பு ஏவுகணைகள் உள்ளிட்ட முக்கிய கையிருப்புகள் குறையக்கூடும். இதனால் ஈரான் மேற்கொள்ளும் பதிலடி தாக்குதல்களை தடுக்க சிரமம் ஏற்படலாம். மேலும், இஸ்ரேல் மற்றும் உக்ரைன் போன்ற நட்பு நாடுகளுக்கு வழங்கப்பட்ட ராணுவ உதவியால் கையிருப்பு ஏற்கனவே குறைந்துள்ளதாகவும், ஈரானின் உற்பத்தி வேகம் அமெரிக்காவின் தடுப்பு ஏவுகணை உற்பத்தியை விட அதிகமாக இருப்பது நீண்டகால போரில் சவாலாக இருக்கலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தாக்குதல்கள் அதிகரிப்பதால் துல்லிய தாக்குதல் ஆயுதங்களின் கையிருப்பும் குறையக்கூடும் என்ற கவலை எழுந்துள்ள நிலையில், இதை சமாளிக்க வெள்ளை மாளிகையில் ஆயுத உற்பத்தி நிறுவனங்களுடன் அவசர ஆலோசனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதில் லாக்ஹீட் மார்டீன், ஆர்.டி.எக்ஸ்., போயிங் உள்ளிட்ட பெரிய நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.




