சிவகங்கை: காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், காங்கிரஸ் இடம்பெறும் கூட்டணியையே சிறுபான்மையினர் நம்புவார்கள் என்றும், தங்கள் கட்சி எப்போதும் முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருந்ததாகவும் தெரிவித்தார். வங்கி கடன் தள்ளுபடிக்கு விதிமுறைகள் உள்ளன; தேசிய வங்கிகளில் பெற்ற கடன்களை மாநில அரசு தள்ளுபடி செய்ய முடியாது என்றும் கூறினார்.

மேலும், இலவசத் திட்டங்களுக்கு மாற்றாக நேரடி பண வினியோகம் செய்வதை வரவேற்பதாக அவர் தெரிவித்தார். போதைப் பொருட்கள் பரவல் நாடு முழுவதும் உள்ள பிரச்னை என்பதால், அதன் வினியோகத்தைத் தடுக்க நடவடிக்கை தேவை என்றும் கூறினார்.

போதைப் பொருட்கள் தொடர்பாக போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; மறுவாழ்வு மையங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதற்கிடையில், இரண்டு நாட்களுக்கு முன்பு காரைக்குடியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஈரானில் நடந்த தாக்குதல் தொடர்பாகவும், அந்நாட்டு தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக கூறப்பட்ட விவகாரம் குறித்த கேள்வியும் எழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அந்த நேரத்தில் கார்த்தி கமேனியை கடுமையாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.

அந்த கருத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் கண்டனம் தெரிவித்த நிலையில், நேற்று சிவகங்கை அரண்மனை பகுதியில் முஸ்லிம் கூட்டமைப்பினர் கார்த்திக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.