ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ) மற்றும் அந்தப் பிராந்தியத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையை முன்னிட்டு, அங்கு வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்புடன், விழிப்புடன் இருந்து அமைதியாக இருக்க வேண்டும் என்று இந்தியத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. உள்ளூர் அதிகாரிகள் வெளியிடும் வழிகாட்டுதல்களை முறையாகப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
தற்போது வான்வெளி மூடப்பட்டுள்ளதால் வழக்கமான விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தூதரகம் தெரிவித்தது. அதே நேரத்தில் இந்தியா மற்றும் யுஏஇ விமான நிறுவனங்களின் சிறப்பு விமானங்கள் அனுமதி பெற்று பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன; பயண விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தற்போதைய சூழ்நிலை காரணமாக பிப். 28க்கு பிறகு யுஏஇயிலிருந்து புறப்பட முடியாமல், விசா காலாவதியானவர்களுக்கு கூடுதல் நாட்கள் தங்குவதற்கான அபராதம் ரத்து செய்யப்படுவதாக யுஏஇ அரசு அறிவித்துள்ளதாக தூதரகம் குறிப்பிட்டது. இதேபோல் பிற காரணங்களால் திரும்ப முடியாதவர்களுக்கும் அபராதம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
அபுதாபியில் உள்ள இந்தியத் தூதரகமும், துபாயில் உள்ள தூதரக அலுவலகமும் விசா, பாஸ்போர்ட் உள்ளிட்ட தூதரக சேவைகளை வழக்கம்போல் வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேகங்கள் மற்றும் புகார்கள் தொடர்பாக யுஏஇயில் உள்ள இந்தியர்கள் 24 மணி நேரமும் செயல்படும் 800-46342 உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். மேலும் +971 543090571 என்ற வாட்ஸ் அப் எண், [email protected] மற்றும் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிகள் மூலமாகவும் உதவி கோரலாம். தற்போதைய நிலவரம் குறித்து இணையதளம் மற்றும் சமூக ஊடகங்கள் வழியாக தொடர்ந்து அறிவிப்புகள் வெளியிடப்படும் என்றும் தூதரகம் தெரிவித்துள்ளது.




