இலங்கையின் காலி துறைமுகம் அருகே இந்தியப் பெருங்கடலில் பயணித்த ஈரானின் ‘ஐரிஸ் டீனா’ போர் கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் டார்பிடோ மூலம் தாக்கி மூழ்கடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிப். 18 முதல் 25 வரை இந்தியா அருகே வங்கக் கடலில் நடைபெற்ற கடற்படை பயிற்சிகளில் அந்தக் கப்பல் பங்கேற்றதாக கூறப்படுகிறது. பல நாடுகளின் கடற்படைகள் கலந்து கொண்டு கடல் பாதுகாப்பு மற்றும் கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சி முடிந்த பின் இலங்கையைத் தாண்டி இந்தியப் பெருங்கடலில் சென்றுகொண்டிருந்த போது, காலியிலிருந்து சுமார் 75 கி.மீ. தொலைவில் சர்வதேச கடற்பரப்பில் தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. தாக்குதலின் போது கப்பல் வெடித்து இரு துண்டுகளாக உடைந்து மூழ்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தாக்குதல் நேரத்தில் கப்பலில் சுமார் 180 பேர் கொண்ட குழுவினர் இருந்ததாகவும், இதில் 87 பேர் உயிரிழந்ததாகவும் 61 பேர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவசர அழைப்பு வந்ததைத் தொடர்ந்து இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை இணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு 30 பேரை மீட்டதாக கூறப்படுகிறது.
இந்த நடவடிக்கையை அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் பீட் ஹெக்செத் உறுதிப்படுத்தி, சம்பவத்துக்கான வீடியோ ஆதாரத்தையும் வெளியிட்டதாக தகவல். மேலும், இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு டார்பிடோ மூலம் எதிரி போர் கப்பல் மூழ்கடிக்கப்பட்டது இதுவே முதல் முறை என அவர் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




