அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, மேற்காசியாவில் போர் ஐந்தாவது நாளாகவும் தொடர்கிறது. டெஹ்ரான் உள்ளிட்ட பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் தொடர்ந்து ஏவுகணை தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இதற்கு பதிலடியாக, மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளிட்டவற்றை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லாவை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், ஈரான் படைகளும் லெபனானுக்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது.
ஈரான் செலுத்திய ஏவுகணையை ‘நேட்டோ’ அமைப்பின் ஏவுகணை தடுப்பு அமைப்பு நடுவானில் அழித்ததாக துருக்கி அறிவித்துள்ளது. இரு தரப்பும் ஒருவரின் முக்கிய தளங்களை மற்றொருவர் குறிவைத்து பரஸ்பரம் ஏவுகணை தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.
சவுதி அரேபியாவின் ராஸ் தனுராவில் உள்ள அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஈரான் இரண்டாவது முறையாக ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டது. மத்திய தரைக்கடலில் லிபியா அருகே, ரஷ்யக் கொடியுடன் சென்ற திரவ இயற்கை எரிவாயு ஏற்றிச் சென்ற கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் அது தீப்பிடித்து கடலில் மூழ்கியது.
மேலும், ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள ‘அமேசான்’ நிறுவனத்தின் இரண்டு தகவல் பகுப்பாய்வு மையங்கள் ஈரான் தாக்குதலில் சேதமடைந்ததாகவும், பஹ்ரைனில் உள்ள மையமும் தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஈரானில் இதுவரை 1,045 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டின் மனித உரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.




