சென்னை: கர்நாடகாவின் மேகதாது அணை தொடர்பான சமீபத்திய அறிவிப்பை முன்வைத்து, தமிழகத்தின் உரிமைகள் மற்றும் நலன்கள் பாதிக்கப்படும் வகையில் திமுக அரசு நடக்கிறது என பாஜ முன்னாள் மாநில தலைவர் கே. அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில், தமிழக விவசாயிகளுக்கு உயிர்நாடியாக உள்ள காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கப்படும் என கர்நாடக காங்கிரஸ் அரசு தனது நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளதாக கூறினார்.

திமுக காங்கிரஸுடன் கூட்டணியை உறுதி செய்த அடுத்த நாளே இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பதாக சுட்டிக்காட்டிய அவர், கூட்டணிக்குள் காங்கிரஸை தக்கவைக்க தமிழக மக்கள் நலனை திமுக அரசு “அடமானம்” வைத்துள்ளதாக விமர்சித்தார்.

தமிழகத்தின் உரிமையை காக்காமல் கர்நாடக காங்கிரஸ் அரசுக்கு சாதகமாக நடப்பது கண்டிக்கத்தக்கது என்றும், திமுகவின் அரசியல் நலனுக்காக தமிழக உரிமைகளை பலிகடா ஆக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

மேகதாது திட்ட அறிக்கை தயாரிக்கும் பணியை கைவிட வலியுறுத்தி, கூட்டணிக் கட்சித் தலைவரான கர்நாடக முதல்வருடன் உடனடியாக பேச வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலினை அண்ணாமலை வலியுறுத்தினார்.