அசாமில் பயிற்சி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படையின் சுகோய் Su-30 போர் விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இரு விமானிகளும் உயிரிழந்தனர்.
ஜோர்ஹட் விமானத் தளத்திலிருந்து புறப்பட்ட அந்த விமானம் புதன்கிழமை இரவு 7:42 மணியளவில் ரேடார் தொடர்பை இழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தை கண்டறிய விமானப்படை உடனடியாக தேடுதல் பணியை தொடங்கியது.
தீவிர தேடுதலுக்குப் பிறகு, விமானம் கீழே விழுந்து நொறுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் அனுஜ் மற்றும் பூர்வேஷ் துராக்கர் என அடையாளம் காணப்பட்ட இரு விமானிகளும் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
விமானப்படை வெளியிட்ட அறிக்கையில் இரங்கல் தெரிவித்து, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு துணையாக இருப்போம் என கூறியது. பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இரங்கல் தெரிவித்து, விமானிகளின் துணிச்சலும் தேச சேவையும் என்றும் நினைவுகூரப்படும் என குறிப்பிட்டார்.




