டெஹ்ரான்: ஈரான் மதத் தலைவரும் ஆட்சியாளருமான ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்த தாக்குதல் தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல் படைகள் “ப்ளூ ஸ்பேரோ” எனப்படும் மிகத் துல்லியமான ஏவுகணையை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நடத்தி வரும் தாக்குதல்கள் தொடரும் நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. கமேனியின் மரணம் போரில் ஈரானுக்கு பெரிய பின்னடைவாக கருதப்பட்டாலும், அமெரிக்கா–இஸ்ரேல் கூட்டுப்படைகளுக்கு எதிராக ஈரான் படைகள் இன்னும் போரிட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.
தகவலின்படி, போருக்கு முன்பே கமேனியின் நடமாட்டம் குறித்து அமெரிக்க மற்றும் இஸ்ரேல் புலனாய்வு அமைப்புகள் ரகசியமாக கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது. தாக்குதல் உறுதி என முன்கூட்டியே உணர்ந்த கமேனி, சில மணி நேரங்கள் முன்பு வரை பாதுகாப்பான பதுங்கு தளங்களில் இருந்ததாகவும், பிப்.28 அன்று உயர்நிலைக் குழுக் கூட்டத்திற்காக அவர் அலுவலகம் வருவார் என்ற தகவல் கிடைத்ததும் சில வினாடிகளில் பிரதமர் அலுவலக வளாகத்தில் சரமாரியாக ஏவுகணைகள் வீசப்பட்டு அவர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. கூட்டத்திற்காக வந்த முக்கிய துறைகளின் அதிகாரிகளும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஏவுகணை, இஸ்ரேல் எப்-15 போர் விமானத்திலிருந்து ஏவப்பட்ட “ப்ளூ ஸ்பேரோ” என அடையாளப்படுத்தப்படுகிறது. இது இஸ்ரேலின் மேம்படுத்தப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணை குடும்பத்தைச் சேர்ந்ததாகவும், “ப்ளாக் ஸ்பேரோ”, “சில்வர் ஸ்பேரோ” போன்ற தொடர்புடைய வகைகளும் உள்ளதாகவும் தகவல் குறிப்பிடுகிறது.
“ப்ளூ ஸ்பேரோ” சுமார் 6.5 மீட்டர் நீளமும், 1,900 கிலோ எடையும் கொண்டதாகவும், 1,240 மைல்கள் (சுமார் 2,000 கிமீ) வரை பறந்து இலக்கை தாக்கும் திறன் இருப்பதாகவும் கூறப்படுகிறது. விமானத்திலிருந்து ஏவப்பட்ட உடனே செங்குத்தாக உயர்ந்து, பின்னர் வேகமாக வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்து இலக்கை அணுகும் அதன் பறக்கும் முறை காரணமாக இடைமறிப்பது கடினம் எனவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.




