‘மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027’ பணிகள் முழுமையாக டிஜிட்டல் முறையில் நடத்தப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் களப்பணிக்காக சுமார் 32 லட்சம் அரசு அலுவலர்களை ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

2021ல் நடைபெற வேண்டிய கணக்கெடுப்பு, கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ‘மக்கள்தொகை 2027’ தொடர்பான பணிகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கணக்கெடுப்பு இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல் கட்டமாக ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை வீடுகளின் பட்டியல் தயாரித்தல் மற்றும் வீடுகளின் எண்ணிக்கை கணக்கிடுதல் நடைபெறும்; இதில் 33 கேள்விகளுக்கு மக்களிடமிருந்து பதில்கள் பெறப்படும்.

அடுத்த ஆண்டு பிப்ரவரி முதல் இரண்டாம் கட்டமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு தொடங்கும். இந்த கட்டத்தில்தான் ஜாதிவாரியான விவரங்களும் சேகரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஜிட்டல் செயல்முறைக்காக புதிய பிரசார உருவச்சின்னங்கள் மற்றும் தளங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நான்கு முக்கிய டிஜிட்டல் கூறுகளை வெளியிட்டார்: செயற்கைக்கோள் உதவியுடன் பகுதி சரிபார்க்கும் ‘ஹவுஸ் லிஸ்ட்டிங் பிளாக் கிரியேட்டர்’, 16 மொழிகளில் இயங்கும் கணக்கெடுப்பாளர் மொபைல் செயலி, மக்கள் தாமாகவே ஆன்லைனில் விவரங்களை பதிவேற்றும் ‘செல்ப் எனுமரேஷன்’ தளம், மேலும் ‘சி-டாக்’ வடிவமைத்த கணக்கெடுப்பு மேலாண்மை மற்றும் கண்காணிப்பு அமைப்பு. பிரசார உருவங்களாக ஆண் உருவத்திற்கு ‘விகாஸ்’ என்றும் பெண் உருவத்திற்கு ‘பிரகதி’ என்றும் பெயரிடப்பட்டுள்ளன.