மேல்முறையீடு நிலுவையில் உள்ள நிலையில், பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜாவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை சென்னை உயர் நீதிமன்றம் தளர்த்தியுள்ளது.
2018-ம் ஆண்டில் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவுகள் தொடர்பாக இந்த வழக்குகள் உருவானது. அதில் ஒன்று தி.மு.க., எம்.பி., கனிமொழியை அவமதிக்கும் வகையில் இருந்ததாகவும், மற்றொன்று திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டதை குறிப்பிட்டு, பெரியார் சிலையை அகற்றுவோம் என கூறியதாகவும் புகார் அளிக்கப்பட்டது.
இந்த இரண்டு பதிவுகள் தொடர்பான புகார்களின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை சென்னை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து, 2024 டிசம்பர் 2-ம் தேதி தீர்ப்பளித்தது. இரு வழக்குகளிலும் தனித்தனியாக ஆறு மாதம் சிறைத் தண்டனையும், தலா ரூ.5,000 அபராதமும் விதிக்கப்பட்டது.
இதனை எதிர்த்து எச்.ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். உயர் நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்து, மாதத்தின் ஒவ்வொரு முதல் வேலை நாளும் விசாரணை நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்திருந்தது.
தற்போது உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறி, அந்த நிபந்தனையை தளர்த்த கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, எச்.ராஜாவுக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகலாம் என உத்தரவிட்டார்.




