சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இடைக்காட்டூரில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள்மீது நடந்ததாக கூறப்படும் தாக்குதலில் 3 பேர் காயமடைந்தனர் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 9 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மார்ச் 3 மதியம் 3 மணியளவில் செட்டிகுளத்தைச் சேர்ந்த பாண்டியராஜ் (41) மற்றும் வி.புதுக்குளத்தைச் சேர்ந்த மகேஷ் (42) இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த வழியாக வந்த இடைக்காட்டூரைச் சேர்ந்த ராஜூ (42) சண்டை வேண்டாம் என கூறி இருவரையும் விலக்கினார்.
அதே நாள் இரவு 8 மணியளவில் மகேஷ் நண்பர்களுடன் 3 இருசக்கர வாகனங்களில் வந்து பாண்டியராஜை தேடியதாகவும், அவர் அங்கு இல்லாததால் ராஜூவை எதிர்கொண்டு தாக்கியதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலைத் தடுக்க வந்த ராஜூவின் சகோதரர் ராஜேந்திரன் (45) மற்றும் உறவினர் தினேஷ் (29) ஆகியோரும் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பின்னர் அந்தக் குழு செட்டிகுளம் சென்று பாண்டியராஜின் வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த 3 பேரும் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
மார்ச் 4 அதிகாலை போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், சம்பவ வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதும் நடவடிக்கை குறித்து விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து சிப்காட் போலீசார் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கை பதிவு செய்தனர். சிவகங்கை எஸ்.பி. சிவபிரசாத் கூறுகையில், வி.புதுக்குளம் இருளப்பன், பாலமுருகன், வேல்முருகன், வேம்பத்தூர் பாரதி மற்றும் ஒரு சிறுவன் என 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மகேஷ் உட்பட தலைமறைவான 4 பேரை விரைவில் கைது செய்வோம் எனவும் தெரிவித்தார்.




