பெங்களூரு: 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களை பயன்படுத்த கர்நாடக அரசு தடை விதிக்க உள்ளதாக முதல்வர் சித்தராமையா வியாழக்கிழமை பட்ஜெட் உரையில் அறிவித்தார்.
இந்த நடவடிக்கை குழந்தைகளின் மனநலம் பாதிக்கப்படுவதைத் தடுப்பதற்கும், கல்வியில் செல்போன் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கும் எடுக்கப்படுவதாக அவர் கூறினார்.
சட்டசபையில் கர்நாடக அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது. இது தாம் தாக்கல் செய்யும் 17வது பட்ஜெட் எனவும் சித்தராமையா குறிப்பிட்டார்.
அதே உரையில், போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்த கடுமையான விதிகள் கொண்டு வரப்படும் என்றும், முக்கிய துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், 2025-26ம் ஆண்டில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.1% ஆக இருக்கும் என கூறிய அவர், அரசியலமைப்பின் கூட்டாட்சி ஆட்சி முறையை பின்பற்றாமல் மத்திய அரசு கர்நாடகாவுக்கு அநீதி செய்கிறது என குற்றம்சாட்டினார். நீதிமன்றங்களில் நிலுவை வழக்குகள் காரணமாக அரசு பணியாளர் ஆட்சேர்ப்பு தாமதம் ஏற்படுவதை கருத்தில் கொண்டு 5 ஆண்டுகள் வயது தளர்வு வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு பல்வேறு துறைகளில் 56,432 பணியிடங்களை நிரப்பும் பணியைத் தொடங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.




