மேற்காசியா மற்றும் உக்ரைனில் தொடரும் மோதல்கள் கவலை அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். போர்களை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும், எந்த பிரச்னையையும் ராணுவ மோதல் மூலம் மட்டும் தீர்க்க முடியாது என்றும் அவர் கூறினார்.

பின்லாந்து அதிபர் அலெக்சாண்டர் ஸ்டப் நான்கு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில், டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையே மூன்று முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

குடியேற்ற ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் மூலம் இந்திய தொழில்நுட்ப நிபுணர்கள் பின்லாந்தில் வேலை வாய்ப்புகளை பெறுவது எளிதாகும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், 2020ல் செய்யப்பட்ட சுற்றுச்சூழல் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு, கழிவுகளில் இருந்து மின்சக்தி, பசுமை ஹைட்ரஜன், காற்றாலை மற்றும் மின்சக்தி சேமிப்பு தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இணைந்து செயல்பட முடிவு செய்யப்பட்டது.

புள்ளிவிபரத் துறையிலான ஒத்துழைப்பு ஒப்பந்தம் மூலம் அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களை தயாரிக்கும் நடைமுறைகள் மற்றும் அனுபவங்களை இரு நாடுகளும் பரிமாறிக் கொள்ள முடியும். மேலும் செயற்கை நுண்ணறிவு, 6ஜி தொலைத்தொடர்பு, துாய்மையான எரிசக்தி, குவான்டம் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட உயர்தர தொழில்நுட்பங்களில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளதாகவும், டிஜிட்டல் தொழில்நுட்பம், உட்கட்டமைப்பு, நீடித்த வளர்ச்சி ஆகிய துறைகளில் இந்தியா-பின்லாந்து முக்கிய நட்பு நாடுகள் என்றும் பிரதமர் கூறினார்.