இயற்கை (வேதியியல் இல்லாத) விவசாயத்தை வலுப்படுத்தி, வேளாண் ஏற்றுமதியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தெரிவித்தார்.
விவசாயம் மற்றும் கிராமப்புற வளர்ச்சி தொடர்பான இணைய வழி கருத்தரங்கில் பேசிய அவர், இந்திய பொருளாதாரத்தின் முக்கியத் தூண்களில் ஒன்றாக விவசாயம் இருப்பதாகவும், நீண்டகால வளர்ச்சி பயணத்தில் அது முக்கிய பங்கு வகிப்பதாகவும் கூறினார். பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் ஒவ்வொரு ரூபாயும் உரிய நோக்கத்திற்கே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
வேளாண் துறையை ஏற்றுமதி சார்ந்ததாக மாற்ற வேண்டும் என்றும், இந்தியாவின் மாறுபட்ட காலநிலை சவால்களை விவசாயிகள் சமாளிக்கத் தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். தமிழக மற்றும் கேரள விவசாயிகளின் நலனுக்காக தேங்காய்க்கு பட்ஜெட்டில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
நலத்திட்டங்கள் குறித்து பேசுகையில், பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் ரூ.4 லட்சம் கோடிக்கு மேல் கடன் மூலம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளதாக கூறினார். பல்வேறு அரசு திட்டங்கள் அடிப்படை பொருளாதார பாதுகாப்பை வழங்கி, அபாயங்களை குறைத்து விவசாயிகளின் பிரச்னைகளுக்கு தீர்வு அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், விவசாயப் பொருட்களின் தரத்தை மேம்படுத்த வேண்டியதையும், கிராமப்புற வளர்ச்சியில் அரசு கவனம் செலுத்தி வருவதாகவும் கூறினார். 2029ம் ஆண்டுக்குள் மேலும் 3 கோடி பெண்களை மகளிர் சுய உதவிக்குழுக்களில் சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாயத் துறைக்கு மாநிலங்கள் கூடுதல் கவனம் செலுத்த ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.




