பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) கடன் மோசடி வழக்கில் நிரவ் மோடியின் சகோதரர்கள் நீஷல் மற்றும் நெஹல் மோடிக்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கு ₹23,780 கோடி அளவிலான கடன் மோசடியை தொடர்புடையதாகும்.

விசாரணை அமைப்புகளின் குற்றச்சாட்டுப்படி, நிரவ் மோடியும் குஜராத்தை சேர்ந்த வைர வியாபாரி மெஹுல் சோக்சியும் பிஎன்பியின் மும்பை கிளையில் போலி ஆவணங்கள் மூலம் கடன் பெற்றுவிட்டு, திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றனர். அமலாக்கத் துறை (ED) இந்த வழக்கை விசாரித்து, போலி ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளது.

இதன் அடிப்படையில் 2019ல் நிரவ் மோடி தேடப்படும் பொருளாதார குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். மெஹுல் சோக்சியையும் அதேபோல் அறிவிக்கக் கோரிய மனு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், தற்போது பெல்ஜியத்தில் உள்ள அவரை நாடு கடத்தும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது.

நிரவ் மோடி லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும், நிரவ் மோடிக்கு போலி ஆவணங்கள் தயாரித்து உதவியதாக கூறப்படும் அவரது நிறுவனத்தின் மூத்த நிர்வாகிகள் ஆதித்ய நானாவதி மற்றும் சந்தீப் மிஸ்திரிக்கும் இதேபோன்ற நோட்டீஸ் வழங்கப்பட்டு, நால்வரும் மே 7க்குள் பதில் அளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.