நேபாளத்தில் மார்ச் 5 நடைபெற்ற பொதுத்தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் குழப்பம் நிலவிய பின்னணியில் நடந்த இந்தத் தேர்தலில், ராப் பாடகராக அறியப்படும் பாலென் ஷா தலைமையிலான ராஷ்ட்ரிய சுதந்திர கட்சி பல தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளதாக ஆரம்ப நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
275 இடங்களைக் கொண்ட நேபாள பாராளுமன்றத்தில், 165 இடங்கள் நேரடித் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுகின்றன; மீதமுள்ள 110 இடங்கள் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் நிரப்பப்படுகின்றன. இந்தத் தேர்தலில் சுமார் 60% வாக்குப்பதிவு நடைபெற்றதாக கூறப்படுகிறது.
காத்மாண்டுவின் முன்னாள் மேயரான பாலென் ஷாவை ராஷ்ட்ரிய சுதந்திர கட்சி பிரதமர் வேட்பாளராக அறிவித்தது. ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட்–லெனினிஸ்ட் கட்சி சார்பில் முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
நேரடித் தேர்தல் நடைபெற்ற 165 தொகுதிகளுக்கான எண்ணிக்கையில், பாலென் ஷாவின் கட்சி 70க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதே நேரத்தில், ஒலி தலைமையிலான கட்சி 6 இடங்களிலும், நேபாள காங்கிரஸ் 8 இடங்களிலும் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
35 வயதான பாலேந்திர (பாலென்) ஷா கட்டுமான பொறியாளராகவும், ராப் பாடகராகவும் அறியப்படுகிறார். 2022ல் காத்மாண்டு மேயர் தேர்தலில் சுயேட்சையாக வெற்றி பெற்ற அவர், பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக கடந்த ஜனவரியில் மேயர் பதவியை ராஜினாமா செய்தார். வெளிப்படையான நிர்வாகம், ஊழலற்ற ஆட்சி மற்றும் பாரம்பரிய கட்சிகளின் ஆதிக்கத்தை குறைப்பது போன்ற வாக்குறுதிகளால் இளைஞர்களிடையே அவர் ஆதரவை பெற்றுள்ளார்.




