வரும் சட்டசபை தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து, பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் கட்சியின் கவுரவ தலைவர் மணி, செயல் தலைவர் ஸ்ரீ காந்தி, அருள் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் பங்கேற்றனர். தி.மு.க அல்லது அ.தி.மு.க கூட்டணியில் இணைய மேற்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் இல்லாத நிலையில், நடிகர் விஜயின் த.வெ.க (தமிழக வெற்றிக் கழகம்) உடன் கூட்டணி அமைப்பது குறித்து நிர்வாகிகளின் கருத்துகளை ராமதாஸ் கேட்டறிந்ததாக கூறப்படுகிறது.
பல நிர்வாகிகள், தனித்து போட்டியிடுவதற்குப் பதிலாக ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்து கூடுதல் வாக்குகளைப் பெற்று கட்சியின் பலத்தை வெளிப்படுத்துவது நல்லது என்றும், அதனால் ராமதாஸ் தரப்பு பா.ம.க-க்கு அங்கீகாரம் கிடைக்க உதவும் என்றும் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையில், ராமதாஸ் தொடர்ந்த வழக்கு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மார்ச் 9-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கில் அன்புமணி தரப்பும் தேர்தல் ஆணையமும் விளக்கம் அளிக்க உள்ளதாகவும், அதன் பின்னர் கூட்டணி முடிவு தெளிவாகலாம் என்றும் ராமதாஸ் ஆதரவாளர்கள் கூறினர்.
மேலும், வட மாவட்டங்களில் பா.ம.க செல்வாக்கு உள்ள 35 தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அந்த இடங்களில் த.வெ.க உடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் வாய்ப்பு அதிகம் என்றும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால் இதுகுறித்து கேட்டபோது, அருள் எம்.எல்.ஏ., “அதுபோன்ற தகவல்கள் எதுவும் எனக்கு தெரியாது” என்று கூறினார்.




