புதுடில்லி: மேற்காசியாவில் நீடிக்கும் மோதல் “நம் வாசல் வரை வந்துவிட்டது” என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேற்று கூறி, இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி மவுனம் காக்கிறார் என்று விமர்சித்தார்.
இஸ்ரேல்–ஈரான் இடையிலான பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ‘மிலன்’ கடற்படை பயிற்சிக்காக வந்திருந்த ஈரான் போர்க்கப்பல் ‘ஐரிஸ் தேனா’ சமீபத்தில் நாடு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டது.
அது இலங்கை அருகே சென்றபோது, அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் ‘டார்பிடோ’ மூலம் தாக்கி கப்பல் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட ஈரான் மாலுமிகள் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியானது.
இதுவரை 87 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டதாகவும், 32 பேரை இலங்கை கடற்படை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தச் சூழலில் உலகம் நிலையற்ற கட்டத்துக்குள் நுழைந்துள்ளதாக ராகுல் கூறி, இந்தியாவின் எண்ணெய் விநியோகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக எச்சரித்தார். மேலும், இந்தியப் பெருங்கடலில் நடந்த இந்த தாக்குதல் குறித்து பிரதமர் பேசாமல் இருப்பதாகவும், நாட்டின் தன்னாட்சி அதிகாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.




