புதுடில்லி: துபாயில் தங்க இடமின்றி சிக்கியுள்ள பயணிகளுக்கு இலவச தங்குமிடம் வழங்க ஏற்பாடு செய்யப்படுவதாக பாலிவுட் நடிகர் சோனு சூட் அறிவித்துள்ளார்.

செய்தி குறிப்பின்படி, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருவதற்குப் பதிலடியாக, ஈரான் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், சவுதி, பஹ்ரைன் உள்ளிட்ட அண்டை நாடுகள் மீது ஏவுகணை தாக்குதல்கள் நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மேற்காசியப் பகுதியில் பதற்றம் அதிகரித்து, விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவுக்கு செல்லும் முக்கிய வழித்தடமாக துபாய் விமான நிலையம் இருப்பதால், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பயணிகள் அங்கு சிக்கியுள்ளனர்.

இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட சோனு சூட், எந்த நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் மனிதாபிமான அடிப்படையில் இலவச தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவித்தார். இந்த வசதி “டுகாஸ்டா ப்ராப்பர்டீஸ்” என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் மூலம் வழங்கப்படுவதாகவும், தங்கள் நாட்டுக்கான விமான சேவைகள் மீண்டும் தொடங்கும் வரை பயணிகள் அங்கு தங்கலாம் என்றும் கூறினார்.

கொரோனா காலத்திலும் இயற்கை பேரிடர் நேரங்களிலும் உதவிகளை வழங்கி பாராட்டைப் பெற்றவர் சோனு சூட் என்பது குறிப்பிடத்தக்கது.