மேற்காசியாவில் ஈரான் மீது அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதல்கள் 7வது நாளாக நீடிக்கும் நிலையில், ஈரானின் 2வது போர்க் கப்பலில் இருந்த 208 மாலுமிகளை இலங்கை பாதுகாப்பாக மீட்டுள்ளது.
அந்தக் கப்பலும் குறி வைக்கப்படலாம் என்ற அச்சத்தில், கப்பலின் பாதுகாப்பிற்காக இலங்கை கடல் எல்லைக்குள் அனுமதிக்குமாறு ஈரான் கோரிக்கை வைத்ததாக தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இலங்கை அதிபர் அனுர குமார திசநாயகே உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஆலோசனையின் முடிவில் ‘ஐரின் புஷேர்’ என குறிப்பிடப்பட்ட போர்க் கப்பல் கிழக்கு திரிகோணமலை துறைமுகத்திற்கு திருப்பி விடப்பட்டது. பின்னர் இலங்கை கடற்படையினர் கப்பலில் இருந்த 208 பேரையும் மீட்டு கொழும்புக்கு அழைத்துச் சென்றனர்.
இன்ஜின் கோளாறு காரணமாக நடுக்கடலில் கப்பல் தத்தளித்ததாகவும், மனிதாபிமான அடிப்படையில் உயிர்களை காப்பாற்றும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் அதிபர் கூறினார். மேலும், வெளிநாட்டு கொள்கையில் இலங்கை தொடர்ந்து நடுநிலை வகிக்கும் என்றும், போர் உலகப் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்க்கையை பாதிக்கக்கூடும் என்பதால் அமைதிக்காக அனைத்து தரப்பும் முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.




