சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 14 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். சட்டசபை தேர்தலை முன்னிட்டு, மீண்டும் ஆட்சிக்கு வந்தால் செயல்படுத்த உள்ள திட்டங்களாக இவை அறிவிக்கப்பட்டன.

முக்கிய அறிவிப்பாக, “கனவு இல்லம்” திட்டத்தின் கீழ் 2030க்குள் மொத்தம் 7 லட்சம் வீடுகள் கட்டித் தரப்படும் என கூறினார். இதில் கிராமப்புறங்களில் 5 லட்சமும், நகர்ப்புறங்களில் 2 லட்சமும் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. மேலும் மக்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படும்; நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் கண்டறிய சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்; ஒவ்வொரு மாவட்டத்திலும் மனநல ஆலோசனை மையம் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

கல்வித் துறையில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 100% ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்படும்; 300க்கும் மேற்பட்ட நூலகங்கள் உருவாக்கப்படும்; ஒவ்வொரு பள்ளியிலும் விளையாட்டு மற்றும் வாழ்க்கைத் திறன் கல்வி உறுதிப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. “நான் முதல்வன் 2.0” மூலம் கூடுதல் திறன் பயிற்சி வழங்கப்படும்; கல்வி நிலையங்களில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைக்கப்படும் எனவும் கூறப்பட்டது.

மேலும் மேற்கு, கிழக்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் 1,000 மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் அமைக்கப்படும்; உணவுப்பொருள் உற்பத்தி 125 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்தப்படும் என்ற இலக்குகளும் அறிவிக்கப்பட்டன. 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது இலக்கு; ஐடி துறையில் 2 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்; திருப்பூர், கரூரில் ஜவுளித் துறை நவீனமயமாக்கப்பட்டு 35 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உறுதிப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

கடல் கூண்டு மீன் வளர்ப்பு திட்டம் விரிவுபடுத்தப்படும்; புதிய மீன் பண்ணைகள் அமைக்கப்படும்; மீன் உற்பத்தி 200 டன்னில் இருந்து 400 டன்னாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டது. திடக்கழிவு மேலாண்மையில் மாற்றங்கள், மாநகராட்சிகளில் நவீன கலாசார மையங்கள், மாநகராட்சி/நகராட்சிகளில் முழுமையான மழைநீர் வடிகால் அமைப்பு, 2030க்குள் சிறப்பு குறு-சிறு-நடுத்தர தொழில் குழுமங்கள் அமைத்தல், சாலை தொழில்நுட்பம் மற்றும் ஏஐ கண்காணிப்பால் விபத்துகளை குறைத்தல், நெசவாளர்களுக்கான புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் கைத்தறி வகைகளை சர்வதேச கண்காட்சிகளில் காட்சிப்படுத்தல் ஆகியவையும் அறிவிப்புகளில் இடம்பெற்றன.

நிகழ்ச்சியில் பேசிய முதல்வர், மண்ணும் மக்களும் மாநிலமும் பயன்பெறும் கனவுகளை உருவாக்க வேண்டும் என்றார். மார்ச் 6 தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் முக்கிய நாளாக மாறும் என்றும், “தமிழ்நாடு 2030” கனவுகள் மெய்யாகும் என்றும் தெரிவித்தார்.