சென்னை: தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகங்களில் மதம், அரசியல், மொழி மற்றும் ஜாதி சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்த பள்ளிக்கல்வி துறை தடை விதித்துள்ளது. இந்த முடிவு தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் செயல்படும் அனைத்து வகை தனியார் பள்ளிகளும் பள்ளிக்கல்வி துறையின் அங்கீகாரத்துடன் இயங்கி வருகின்றன. அவற்றை கண்காணிக்க தமிழ்நாடு தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகள் நடைமுறையில் உள்ளன.

தனியார் பள்ளி வளாகங்களில் கல்வியுடன் தொடர்பில்லாத பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்படுவதாக துறைக்கு புகார்கள் வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஒழுங்குமுறை விதிகளில் திருத்தம் செய்து அரசாணை வெளியிட்டு அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி, அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளின் நிலம், கட்டடம் உள்ளிட்ட வசதிகள் கல்வி மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகள், மாணவர் நலத்திட்டங்கள், பள்ளி நிகழ்ச்சிகள் ஆகியவற்றுக்கே பயன்படுத்தப்பட வேண்டும்; அவையும் கல்வி நிறுவனத்தின் மேற்பார்வையில் நடத்தப்பட வேண்டும்.

மேலும் அரசியல், மதம், இனம், ஜாதி, மொழி ஆகிய அடிப்படையில் மாணவர்களிடையே பகைமை, வெறுப்பு அல்லது பிளவை உருவாக்கக்கூடிய கல்வியற்ற செயல்பாடுகளுக்காக பள்ளி வளாகத்தை பயன்படுத்தக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.