பரஸ்பர வரி வசூலிப்புக்கு நீதிமன்ற தடை; பணம் திருப்பி வழங்க உத்தரவு
சட்டவிரோதமாக விதிக்கப்பட்ட பரஸ்பர வரிகளின் மூலம் வசூலிக்கப்பட்ட ரூ.12 லட்சம் கோடிக்கு மேற்பட்ட தொகையை திருப்பி வழங்க அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இறக்குமதியாளர்களுக்கு பணம் திருப்பிச் செலுத்தும் பணியை தொடங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
விவகாரத்தின் பின்னணி
கடந்த ஆண்டு ஜனவரியில் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்ப், வர்த்தக பற்றாக்குறையை காரணமாகக் காட்டி பல நாடுகள் மீது அதிக அளவில் பரஸ்பர வரிகளை விதித்தார். இதற்கு உலக நாடுகளிடமும், அமெரிக்காவிற்குள்ளும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன.
உச்சநீதிமன்ற தீர்ப்பு மற்றும் ஏற்பட்ட குழப்பம்
எதிர்க்கட்சிகள் ஆளும் மாகாணங்கள் மற்றும் உள்ளூர் வர்த்தகர்கள் உச்சநீதிமன்றத்தை அணுகிய நிலையில், பார்லிமென்டின் அனுமதி இன்றி அதிபர் தன்னிச்சையாக பிற நாடுகள் மீது வரி விதிக்க முடியாது எனக் கூறி உச்சநீதிமன்றம் பரஸ்பர வரிகளை ரத்து செய்தது. ஆனால் பணத்தை எப்படி திருப்பி வழங்க வேண்டும் என்ற வழிகாட்டுதல் தெளிவாக இல்லாததால் இறக்குமதியாளர்களிடையே குழப்பம் நீடித்தது.
பொதுவான திருப்பிச் செலுத்தும் முறையை உருவாக்க கோரிக்கை
இந்த வரி முறையின் கீழ் மூன்று லட்சத்துக்கும் அதிகமான இறக்குமதியாளர்கள்—அதில் பெரும்பாலானோர் சிறு தொழிலதிபர்கள்—வரி செலுத்தியதாக கூறப்படுகிறது. வரி திருப்பிச் செலுத்தக் கோரி சுமார் 2,000 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மன்ஹாட்டனில் உள்ள அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் எளிதாக பணம் கிடைக்கும் வகையில் ஒரு பொதுவான நடைமுறையை உருவாக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்தது. மேலும், வசூலித்த தொகையை திருப்பி வழங்குவதற்கான செயல் திட்டத்தை அரசு தெரிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.




