சீனாவுடன் இருந்த வர்த்தக உறவில் செய்த தவறுகளை இந்தியாவுடன் மீண்டும் செய்ய மாட்டோம் என்று அமெரிக்க துணை வெளியுறவுத்துறை அமைச்சர் கிறிஸ்டோபர் லாண்டாவ் தெரிவித்தார்.

புதுடில்லியில் நடைபெற்ற புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார மாநாட்டில் பேசிய அவர், கடந்த 20 ஆண்டுகளில் சீனாவுடன் நடந்த வர்த்தக அனுபவங்களில் இருந்து அமெரிக்கா பல பாடங்களை கற்றுக்கொண்டதாக கூறினார். அதனால் இந்தியாவுடன் இறுதிப்படுத்தப்படும் வர்த்தக ஏற்பாடுகளில் அமெரிக்க நலன்களை பாதுகாக்கும் வகையில் அதிக தெளிவுடன் செயல்படுவோம் என்றார்.

சந்தைகளை மேம்படுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்போம் என்றும், பல வர்த்தக விவகாரங்களில் இந்தியா அமெரிக்காவை விட முன்னோக்கி நகர்வதை பார்க்கிறோம் என்றும் லாண்டாவ் குறிப்பிட்டார். மேலும், “அமெரிக்கா பர்ஸ்ட்” என்பது “அமெரிக்கா மட்டும்” என்பதல்ல; பிற நாடுகளுடன் ஒத்துழைப்பதன் மூலம் அமெரிக்கா தனது இலக்குகளை அடைய முடியும் என்றார்.

பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவை சிறந்த நாடாக மாற்ற விரும்புவது போலவே, அதிபர் டொனால்ட் டிரம்ப் அமெரிக்கா தலைசிறந்த நாடாக உருவாக வேண்டும் என்று விரும்புகிறார் என்றும் அவர் கூறினார். 21ஆம் நூற்றாண்டு இந்தியாவின் எழுச்சியுடன் பிணைக்கப்பட்டுள்ளது; உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருப்பதால், இந்த நூற்றாண்டின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய நாடுகளில் இந்தியா ஒன்றாக இருக்கும் என்றார்.

தன் நாட்டின் நலன் கருதியே இந்தியாவுக்கு வந்ததாக கூறிய லாண்டாவ், கூட்டாண்மையை வலுப்படுத்துவது இந்தியாவிற்கும் பயன் தரும் என அமெரிக்கா கருதுவதாக தெரிவித்தார்.