அமராவதி: ஆந்திராவில் 13 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதிக்கப்படும் என முதல்வர் என். சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். இளம் வயதினரை பாதுகாக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் கூறினார்.
இந்தத் தடை தொடர்பான கொள்கை அடுத்த 90 நாட்களில் படிப்படியாக அமல்படுத்தப்படும் என்றும், 13 முதல் 16 வயது வரை உள்ளவர்களுக்கும் இதை நீட்டிக்கலாமா என்பது குறித்து அரசு ஆலோசித்து வருவதாகவும் முதல்வர் தெரிவித்தார்.
குழந்தைகளிடையே மொபைல் போன் பயன்பாடு அதிகரித்து வருவது குறித்து பல்வேறு தரப்புகளில் கவலை வெளிப்படுகிறது. சிறுவயதிலேயே விளையாட்டுகள் மற்றும் யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற தளங்களில் குறும்பட வீடியோக்களை தொடர்ந்து பார்ப்பது, பெற்றோருக்கு தெரியாமல் போனை அணுகுவது போன்ற பழக்கங்கள் அதிகரிப்பதாகவும் கூறப்படுகிறது.
உரிய ஆலோசனைகள் மற்றும் கொள்கை ஆய்வுகளுக்குப் பிறகு கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், சிறார்களிடையே அதிகரிக்கும் மொபைல் பயன்பாட்டால் ஏற்படும் மோசமான விளைவுகளைத் தடுப்பதே இந்த முடிவின் நோக்கம் என்றும் நாயுடு விளக்கினார். இதேபோல் கர்நாடகாவிலும் 16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக ஊடகத் தடை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி குறிப்பிடுகிறது.




