சென்னை: திமுக அரசு சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குவோம் என்ற தேர்தல் வாக்குறுதியை இன்னும் நிறைவேற்றவில்லை எனக் கூறி, அதை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று பாஜ முன்னாள் தமிழக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.

அறிக்கையில், கடந்த 10 ஆண்டுகளில் நாடு முழுவதும் சமையல் எரிவாயு பயன்பாடு சுமார் 45% உயர்ந்துள்ளதாகவும், பிரதமர் நரேந்திர மோடி கொண்டு வந்த உஜ்வாலா இலவச எரிவாயு திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களால் இணைப்புகள் அதிகரித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

சுமார் 14 கோடி வீடுகளில் இருந்த இணைப்புகள் தற்போது 33 கோடிக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு உயர்ந்துள்ளதாக அவர் கூறினார். இதன் காரணமாக பயன்பாடு அதிகரித்து, இறக்குமதியும் உயர்ந்துள்ளதாகவும், மொத்த பயன்பாட்டில் இறக்குமதி பங்கு சுமார் 60% எனவும் அவர் குறிப்பிட்டார்.

போர் போன்ற காரணங்களால் சர்வதேச சந்தையில் விலை உயரும்போது நாட்டிலும் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிறது என அண்ணாமலை கூறினார். திமுக 2021 தேர்தல் வாக்குறுதி எண் 503-ல் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குவோம் என்று கூறியதை நினைவூட்டி, அதை இனியும் தாமதிக்காமல் அமல்படுத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.