எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வங்கதேசத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனைக்கு ரேஷன் முறையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக வங்கதேச பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (BPC) அறிவித்துள்ளது.
வளைகுடா நாடுகளில் நிலவும் பதற்றம் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஈரானை மையமாகக் கொண்ட அமெரிக்கா–இஸ்ரேல் போர் சூழல் உலக சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வரம்புகளின்படி, இருசக்கர வாகனங்களுக்கு அதிகபட்சம் 2 லிட்டர் எரிபொருள் வழங்கப்படும். தனியார் கார்களுக்கு 10 லிட்டர் வரை வழங்கப்படும்; எஸ்யூவி வகை கார்கள், ஜீப்கள், மினி பஸ்களுக்கு 20 முதல் 25 லிட்டர் வரை வழங்கப்படும்.
பிக்அப் வேன்கள் மற்றும் உள்ளூர் பஸ்களுக்கு 70 முதல் 80 லிட்டர் வரை வழங்கப்படும். தொலைதூரம் செல்லும் லாரிகள், டிரக்குகளுக்கு 200 முதல் 220 லிட்டர் வரை எரிபொருள் வழங்கப்படும்.
இந்த நெருக்கடி காலத்தில் எரிபொருள் விலை உயர்த்தப்படாது என்றும், தற்போதைய சூழலை காரணம் காட்டி கூடுதல் விலைக்கு பெட்ரோல் அல்லது டீசலை விற்கக் கூடாது என்றும் BPC எச்சரித்துள்ளது.




