நாட்டில் மாற்று எரிபொருட்களுக்கு மாறுவதை பெட்ரோலிய நிறுவனங்கள் எளிதில் அனுமதிக்காது என்று மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

மஹாராஷ்டிராவின் புனேவில் நடைபெற்ற உயிரி எரிபொருள் மாநாட்டில் பேசிய அவர், எரிசக்தியில் தன்னிறைவு கிடைத்தால் நாட்டின் பொருளாதாரம் ரூ.460 லட்சம் கோடி என்ற இலக்கை எட்ட முடியும் என்றார். மேற்காசியப் பிராந்தியத்தில் நிலவும் நெருக்கடி, எரிசக்தி பாதுகாப்பு எவ்வளவு அவசியம் என்பதை காட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

நாடு பயன்படுத்தும் எரிசக்தியில் 86% இறக்குமதி செய்யப்படுவதாகவும், இதற்காக ரூ.22 லட்சம் கோடி செலவாகிறது என்றும் கட்கரி கூறினார். 2030க்குள் போக்குவரத்து அமைப்பை பாதுகாப்பானதாக மாற்றுவது நோக்கம் என்றும், மாசற்ற எரிபொருட்களையும் விவசாயத்தையும் ஊக்குவித்தால் உள்நாட்டு எரிபொருட்கள் மூலம் பல நன்மைகள் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.

மாற்று எரிபொருட்கள் சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார நலனுக்கு உதவுவதோடு, நுகர்வோரின் செலவையும் குறைக்கும்; கிராமப்புறங்களில் வேலை வாய்ப்பும் அதிகரிக்கும் என்றார். ஆனால் ரூ.22 லட்சம் கோடி மதிப்பிலான பெட்ரோலியப் பொருட்கள் இறக்குமதியில் பெருநிறுவனங்கள் ஆர்வம் காட்டுவதால், மாற்று எரிபொருள் பயன்பாட்டை அவை அனுமதிக்காது என அவர் குற்றம்சாட்டினார்.